பிரபஞ்ச நாயகன் சிவபெருமானை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
பிரபஞ்ச நாயகன் சிவபெருமானை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்.
2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.
3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன?
நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர்.
4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.
5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ?
தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.]
6. படைத்தலாவது யாது?
ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.
7. காத்தலாவது யாது?
தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல்.
8. அழித்தலாவது யாது?
தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்
9. மறைத்தலாவது யாது?
ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதல்.
10. அருளலாவது யாது?
ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.
11. தனு கரண புவன் போகம் என்றது என்னை?
தனு = உடம்பு; கரணம் = மன முதலிய கருவி; புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம். போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.
12. ஒரு காரியத்திற்கு காரணம் எத்தனை?
முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்றாம். குடமாகிய காரியத்துக்கு முதற் காரணம் மண், துணைக் காரணம் திரிகை, நிமித்த காரணம் குயவன். திரிகை - சக்கரம்.
13. தனு கரண புவன் போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்திற்கு முதற்காரணம் துணைக்காரணம் நிமித்த காரணம் எவை?
முதற் காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று. துணைக்காரணம் சிவசக்தி; நிமித்த காரணம் சிவபெருமான்.
14. சிவசத்தியாவது யாது?
அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.
15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?
அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.
16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?
அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுதுமகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.
17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா?
ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.
18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?
சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார். [அதிட்டித்தல்=நிலைக்களமாகக் கொண்டு செலுத்துதல்]
19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?
சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து சமயதீ?க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.
20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?
பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி; உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய சத்தி மனோன்மணி.
21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?
பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி, இலிங்கஞ் சிவம்.
22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?
படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது [லிங்க=சித்திரித்தல்]
23. மகேசுர வடிவம் எத்தனை?
சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ?ணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்துமாம்.
2. பசுவியல்
24. ஆன்மாக்களாவார் யாவர்?
நித்தியமாய், வியாபகமாய்ச், சேதனமாய்ப், பாசத்தடையுடையோராய்ச், சார்ந்ததன் வண்ணமாய்ச் சரீரந்தோறும் வெவ்வேறாய், வினைகளைச் செய்து வினைப் பயன்களை அநுபவிப்பேராய்ச், சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையோராய்த், தமக்கு ஒரு தலைவனை உடையவராய் இருப்பவர். (சேதனம் - அறிவுடைப் பொருள்)ஆன்மாக்கள் எடுக்கும் சரீரம் எத்தனை வகைப்படும்?
தூல சரீரம், சூக்கும சரீரம் என இரண்டு வகைப்படும்.
26. தூல சரீரமாவது யாது?
சாதி, குலம், பிறப்பு முதலியவைகளால் அபிமானஞ் செய்தற்கு இடமாய்ப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து பூதமும் கூடிப் பரிணமித்த உருவுடம்பு. (பரிணமித்தல் - உருத்甜ிரிதல்)
27. சூக்கும சரீரமாவது யாது?
சத்த ஸ்பரிச ரூப ரச கந்தம் என்னும் காரண தன்மாத்திரையைந்தும், மனம் புத்தி அகங்காரம் என்னும் அந்தக்கரண மூன்றுமாகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு, ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அநுபவித்தற்குக் கருவியாய், ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு.
28. ஆன்மாக்கள் எப்படிப் பிறந்திறந்து உழலும்?
நல்விணை, தீவிணை என்னும் இருவினைக்கும் ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், ஏழுவகைப் பிறப்பையும் எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப், பிறந்திறந்து உழலும்.
29. நால்வகைத் தோற்றங்களாவன யாவை?
அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அண்டசம் = முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் = வேர்வையிற் தோன்றுவன. உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன. சராயுசம் = கருப்பையிற் தோன்றுவன.
30. எழுவகைப் பிறப்புக்களாவன யாவை?
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பவைகளாகும். இவ்வெழுவகையினுள்ளும், முன் நின்ற ஆறும் இயங்கியற் பொருள்கள்; இறுதியில் நின்ற தாவரங்கள் நிலையியற் பொருள்கள். இயங்கியற் பொருளின் பெயர் சங்கமம், சரம்; நிலையியற் பொருளின் பெயர் தாவரம், அசரம்.
31. கருப்பையிலே பிறப்பன யாவை?
தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளுமாம்.
32. முட்டையிலே பிறப்பன யாவை?
பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவுமாம்.
33. வேர்வையிலே பிறப்பன யாவை?
கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளுமாம். (கீடம் - புழு)
34. வித்தினும் வேர், கொம்பு, கொடி, கிழங்குகளிலும் பிறப்பன யாவை?
தாவரங்கள்.எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் எவை?
1. தேவர் -11,00,000 யோனி பேதம்
2. மனிதர்- 9,00,000 யோனி பேதம்
3. நாற்கால் விலங்கு -10,00,000 யோனி பேதம்
4. பறவை -10,00,000 யோனி பேதம்
5. ஊர்வன -15,00,000 யோனி பேதம்
6. நீர்வாழ்வன -10,00,000 யோனி பேதம்
7. தாவரம் -19,00,000 யோனி பேதம்
ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம்ஆன்மாக்கள் வினைகளைச் செய்தற்கும் வினைப் பயன்களை அநுபவித்தற்கும் இடம் எவை?
இருவினைகளைச் செய்தற்கும் இருவினைப் பயன்களை அநுபவித்தற்கும் இடம் பூமி; நல்வினைப் பயனை அநுபவித்தற்கு இடஞ் சுவர்க்க முதலிய மேலுலங்கள்; தீவினைப் பயனை அநுபவித்தற்கு இடம் இருபத்தெட்டுக் கோடி நரகங்கள்.
37. பூமியிலே பிறந்த ஆன்மாக்கள் சரீரத்தை விட்டவுடனே யாது செய்யும்?
நல்வினை செய்த ஆன்மாக்கள், தூல சரீரத்தை விட்டவுடனே, சூக்கும சரீரத்தோடு பூதசார சரீரமாகிய தேவ சரீரத்தை எடுத்துக்கொண்டு, சுவர்க்கத்திலே போய் அந்நல்வினைப் பயனாகிய இன்பத்தை அநுபவிக்கும் தீவினை செய்த ஆன்மாக்கள், தூல சரீரத்தை விட்டவுடனேயே, சூக்கும சரீரத்தோடு பூத சரீரமாகிய யாதனா சரீரத்தை எடுத்துக்கொண்டு, நரகத்திலே போய் அத்தீவினைப் பயனாகிய துன்பத்தை அநுபவிக்கும். இப்படியன்றி, ஒரு தூல சரீரத்தை விட்டவுடனே பூமியிலே தானே ஒரு யோனி வாய்ப்பட்டு, மற்றொரு தூல சரீரத்தை எடுப்பதும் உண்டு.
38. சுவர்க்கத்திலே இன்பம் அநுபவித்த ஆன்மாக்கள் பின் யாது செய்யும்?
தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து மனிதர்களாய்ப் பிறக்கும்.
39. நரகத்திலே துன்பம் அநுபவித்த ஆன்மாக்கள் பின்பு யாது செய்யும்?
தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து முன்பு தாவரங்களையும் பின்பு நீர்வாழ்வனவாயும், பின்பு ஊர்வனவாயும், பின்பு பறவைகளாயும், பின்பு விலங்குகளாயும் பிறந்து, பின்பு முன் செய்த நல்வினை வந்து பொருந்த மனிதர்களாய்ப் பிறக்கும்.
40. எழுவகைப் பிறப்பினுள்ளும் எந்தப் பிறப்பு அருமையுடையது?
பசுபதியாகிய சிவபெருமானை அறிந்து வழிபட்டு முத்தியின்பம் பெற்றுய்தற்குக் கருவியாதலால் மனிதப் பிறப்பே மிக அருமையுடையது.
41. மனிதப் பிறப்பை எடுத்த ஆன்மாக்களுக்கு எப்பொழுது அம்முத்தி சித்திக்கும்?
அவர்கள், தங்கள் தங்கள் பக்குவத்துக்கு ஏற்பப் படிமுறையினாலே, பிறவிதோறும் பெளத்தம் முதலிய புறச்சமயங்களில் ஏறி, ஏறி, அவ்வச் சமயத்துக்கு உரிய நூல்களில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே வைதிக நெறியை அடைந்து, வேதத்தில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே சைவ சமயத்தை அடைவர்கள்; சைவ சமயத்தை அடைந்து, சிவாகமத்தில் விதிக்கப்பட்ட சரியை கிரியை யோகங்களை விதிப்படி மெய்யன்போடு அநுட்டித்தவருக்குச் சிவபெருமான் ஞானாசாரியரை அதிட்டித்து வந்து சிவஞானம் வாயிலாக உண்மை முத்தியைக் கொடுத்தருளுவர்.
42. புறச்சமயங்களின் வழியே ஒழுகினவர்களுக்கு யாவர் பலங் கொடுப்பார்?
புறச்சமயிகளுக்கு, அவ்வவரால் உத்தேசித்து வழிபடப் படுந் தெய்வத்தைச் சிவபெருமானே தமது சத்தியினாலே அதிட்டித்து நின்று, அவ்வவ் வழிபாடு கண்டு, பலங் கொடுப்பார்.
சரியையாவது யாது?
சிவாலயத்துக்குஞ் சிவனடியார்களுக்குந் தொண்டு செய்தல்.
44. கிரியையாவது யாது?
சிவலிங்கப் பெருமானை அகத்தும் புறத்தும் பூசித்தல்.
45. யோகமாவது யாது?
விடயங்களின் வழியே போகாவண்ணம் மனத்தை நிறுத்திச், சிவத்தைத் தியானித்துப், பின்பு தியானிப் போனாகிய தானுந் தியானமுந் தோன்றாது தியானப் பொருளாகிய சிவம் ஒன்றே விளங்கப் பெறுதல்.
46. ஞானமாவது யாது?
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடல்.
47. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினாலும் அடையும் பலங்கள் யாவை?
சரியையினால் அடையும் பலஞ் சிவசாலோக்கியமும், கிரியையினால் அடையும் பலஞ் சிவசாமீப்பியமும், யோகத்தினால் அடையும் பலஞ் சிவசாரூப்பியமுமாம். இம்மூன்றும் பதமுத்தி; ஞானத்தினால் அடையும் பலஞ் சிவசாயுச்சியமாகிய பரமுத்தி.
இவ்வாறு நாமும் சிவபெருமானாக ஆகும் வரை பிறந்து இறந்து வெவ்வேறு வடிவங்களில் இங்கு வாழத்தான் போகிறோம். நம்மை இறைவன் சிவனாகும் வரை விடப் போவதில்லை. எனவே இதை தெளிவாக புரிந்து கொண்டு இறைவன் நம்மை எதற்காக படைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு நாமும் சிவனாக வேண்டுமானால் தசக்காரிய வாசி யோக சாகா கல்வி மூலம் தான் இயலும் வேறு வழி இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டு அனைவரும் சாகா கல்வி கற்க முன்வர வேண்டும்.
தமிழர்களின் மரபுக் கல்வி சாகா கல்விதான். சாகும் கல்வி என்பது இடைச் சொருகல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
யோகி ஆடலரசன் ஐயா.
நிறுவனர்:- வாகீசர் வாசியோகப் பயிற்சி மையம் மற்றும் சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம். திருக்கோவிலூர்.
Cell - 8675371212.
🙏திருச்சிற்றம்பலம் 🙏
🙏சிவ சிவ 🙏
Comments
Post a Comment