திருக்கடையூர் சிவபெருமானின் அட்ட வீரட்டேஸ்வரர் தலம்
சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் திருக்கடையூரும் ஒன்றாகும்.
நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.
எமனை உதைத்த காலசம்ஹார மூர்த்திக்கு தனி சன்னிதி உள்ளது. அம்பாளின் திருநாமம் அபிராமி.
பிரம்மா, ஞான உபதேசம் பெற வேண்டும் என சிவபெரு மானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான், பிரம்மாவிடம் வில்வ விதை ஒன்றைக்கொடுத்து இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு நீ என்னை வழிபடு என்றார்.
சிவபெருமான் கட்டளைப்படி பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப்பார்த்தார். திருக்கடவூரில் தான் வில்வ விதையில் இருந்து முளை வந்தது. இதனால் இந்தப்பகுதிக்கு வில்வவனம் என்ற பெயர் ஏற் பட்டது.
சாகாவரம் தரும் அமிர்தத்தை பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர்.
அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாத தேவர்கள் அதை குடத்தில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றனர்.
அவ்வாறு செல்லும் வழியில் நீராடுவதற்காக ஒரு இடத்தில் குடத்தை வைத்தனர். நீராடி விட்டு வந்து குடத்தை எடுக்க முயன்ற போது குடத்தை எடுக்க முடியவில்லை.
அந்த குடம் பாதாளம் வரை ஊடுருவி சென்று சிவலிங்கமாக மாறி இருப்பதை கண்டார்கள். அமிர்தம் இருந்த இடம் பூமியில் வேர் ஊன்றிவிட்ட இடம் என்பதால் இந்தப்பகுதி திருக் கடவூர் எனப்பெயர் பெற்றது.
மிருகண்டு முனிவரும், அவரது மனைவியும் குழந்தைப்பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர்.
அவர்களின் பக்தியை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி, ஆயிரம் ஆண்டுகள் வாழும் கெட்ட குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் அறிவில் சிறந்த மகன் வேண்டுமா? என கேட்டார். அதற்கு அவர்கள் 16 வயது வரை மட்டுமே வாழக் கூடிய தலைச்சிறந்த மகனே எங்களுக்கு போதும் என்றனர்.
இறைவன் அவர்கள் விருப்பப்படியே வரம் அளித்தார். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் மார்க்கண்டேயன் என்ற மகன் பிறந்தான். மார்க்கண்டேயன் அறிவில் சிறந்தவராகவும், சிறந்த சிவபக்தராகவும் விளங்கினார்.
அவருக்கு 16 வயது ஆன போது அவரது பெற்றோர், இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயனிடம் கூறினர். எனக்கு நீண்ட ஆயுளை சிவபெருமானால் மட்டுமே வழங்கமுடியும்.
ஆதலால் நான் ஒவ்வொரு ஆலயமாக சென்று வழிபடுகிறேன் என பெற்றோரிடம் கூறி விட்டு மார்க்கண்டேயன் ஒவ்வொரு ஆலயமாக தரிசித்து வந்தார்.
அவ்வாறே திருக்கடையூர் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் வந்தது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீசினான்.
எமனைக்கண்டு அச்சமடைந்த மார்க்கண்டேயன் தான் வழிபட்டு கொண்டு இருந்த லிங்கத்தை ஆரத்தழுவிக்கொண்டான்.
எமனும் தனது பாசக்கயிற்றை லிங்கத்தின் மீதும் சேர்த்து வீசினான். சிவபெருமான் தன்னை காக்கும் பொருட்டு லிங்கத்தில் இருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனை காலால் எட்டி உதைத்தார்.
காலனை சூலாயுதத்தால் கொன்று காலனுக்கு காலனாக, காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்னர் மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக வாழும் வரத்தை வழங்கி அருள்புரிந்தார்.
பின்னர் பூமாதேவி, பிரம்மா, மகாவிஷ்ணு ஆகியோர் வேண்டுதலுக்கு இணங்க எமன் உயிர் பெற்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
ஆலயத்தின் மேற்கில் ஏழு நிலை ராஜகோபுரம் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. கருவறையில் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
கருவறை சுற்றுப்பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமாஸ்கந்தர், நடராஜர், விவ்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூதங்கள், சூரியன், அகத்தியர், சப்தகன்னியர்கள், 64 நாயன்மார்கள் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இந்த கோவிலில் நவக் கிரகங்கள் இல்லை.
கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காட்சி அளிக்கிறார்.
அருகில் மார்க்கண்டேயன் கூப்பிய கரத்துடன் நிற்கிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு தனி சன்னிதி உள்ளது.
எமனின் பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் ஒரு தழும்பும் உள்ளது. கோவில் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி அம்மன் சன்னிதி உள்ளது.
முருகப்பெருமான் ஒரு முகத்துடன், நான்கு திருக் கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
*அமாவாசையன்று வானில் தோன்றிய முழுநிலவு*
தஞ்சையை ஆண்ட 2-ம் சரபோஜி மன்னர் ஒருமுறை திருக்கடையூர் வந்தார். அப்போது திருக்கடையூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர், அபிராமியின் மீது அளவு கடந்த அன்பு கொண்டு இருந்தார்.
அவரிடம் மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டார். அபிராமியின் நினைவில் இருந்த பட்டர் அமாவாசையை, பவுர்ணமி திதி என்று தவறாக கூறிவிட்டார்.
பட்டரை பற்றி கோவில் அர்ச்சகர்கள் தவறான தகவல்களை மன்னரிடம் கூறியிருந்தனர். இதனால் கோபமடைந்த மன்னர் இன்று இரவு பவுர்ணமியை காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை வழங்கப்படும் என்றார்.
அம்மனிடம் பாரத்தை போட்டு விட்டு பட்டர், அபிராமி மீது 100 பாடல்களை கொண்ட அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். 79-வது பாடலை பாடிய போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றை கழற்றி ஆகாயத்தில் வீச, அது பவுர்ணமியாக தோன்றியது.
அபிராமி அந்தாதி பாடி முழு மதியை ஆகாயத்தில் காட்டியது அரசனை மெய்சிலிர்க்க வைத்தது. பட்டருக்கு அருள் செய்த அன்னையின் அருளை வியந்து போற்றிய அவர் பட்டரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
*நீண்ட ஆயுள் பெற தம்பதியர் பூஜை*
மரண பயத்தை கடக்கும் ஊர் என்ற காரணத்தால் 60 வயது நிரம்பியவர்கள் கோவிலுக்கு மனைவியுடன் வந்து ஆயுள் வேள்வி செய்கின்றனர்.
60 வயது தொடங்கும் போது உக்ரரத சாந்தியும், 61 வயது தொடக்கத்தில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், 71 வயது தொடக்கத்தில் பீமரத சாந்தியும், 80 வயது தொடக்கத்தில் சதாபிஷேகமும் செய்து கொள்கின்றனர்.
என்றும் இளமையுடன் வாழ சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் செய்யப்படுகிறது. இந்த பூஜைகளை அவரவர் பிறந்த தமிழ் மாதம், பிறந்த நட்சத்திரம், திதி வாரம் கூடி வரும் நாளில் செய்து கொள்வது சிறந்தது.
திருக்கடையூர் கோவிலில் 60-வது திருமண வழிபாடு நடத்தினால் ஒரு கோடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சித்திரை மாதம்-பிரம்மோற்சவம், ஆடிமாதம்-ஆடிப்பூர உற்சவம், தை அமாவாசை உற்சவம், கார்த்திகை மாதம் 1,008 சங்காபிஷேகம்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை-தரங்கம்பாடி செல்லும் வழியில் மயிலாடுதுறையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
சீர்காழியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து பஸ் வசதி உள்ளது.
ரெயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை, சீர்காழியில் இறங்கி அங்கிருந்து திருக்கடையூர் செல்லலாம்.
🙏சிவ சிவ 🙏
🙏திருச்சிற்றம்பலம் 🙏

Comments
Post a Comment